Thursday, September 24, 2009

நினைக்க தெரிந்த மனமே


நினைக்க தெரிந்த மனங்களுக்கு
மறக்கத் தெரியவில்லை

நினைக்க தெரிந்த மனங்களுக்கு
மறக்கத் தெரிந்திருந்தால்

காதல் என்ற
புனிதமான வாழ்வில்
சோகம் என்ற நிகழ்வு
இடம் பெறாது....!

ஆனால்
நினைக்கத் தெரிந்த
மனங்களுக்குத் தான்
மறக்கத் தெரிவதில்லையே...!

Sunday, September 6, 2009

எந்தக் கடவுளும் இருப்பதாய்


அது நத்தாருக்கு முதல் நாள்
கல்லடி கரையில்
நண்பனோடு காற்றுவாங்கிய மாலை!

கடலை அண்ணா கடலை...
அருகில் நின்றான்
அரைகாற்சட்டை
பாதி பெனியன்
கையில் சிகப்பு நூல்
கழுத்தில் தொங்கும் சிலுவை!

மெல்லக் கதை கொடுத்தேன்
அண்ணா நான் ஆறாவது படிக்கிறேன்
அப்பா ஆத்துக்கு மீன்பிடிக்க போறார்
அம்மா வீட்டிலதான்
அக்கா சடங்காயிற்று
தம்பி மூனாவது என்றான்!

அவனுக்காக கடலை வாங்கி
நல்லா படி என்றேன்!

கட்டாயம் நான் படிச்சு
நாளை உங்களைப் போல்
ஆவேன் என்றான்!

விடிந்த பொழுதுகளில்
ஊரெங்கும் பரபரப்பு
ஊருக்குள் கடல் வருகுதாம்!

வைத்தியசாலை நிறைந்த்து
நடைபாதை எங்கும்
உயிரற்ற உடலங்கள்
நிர்வாணமாய்!

சட்டென தலை சுற்றியது
இது எங்கேயோ
பார்த்த முகம்
ஆம்...... நேற்றுப்பார்த்த
அதே முகம்
கையில் நூல்
கழுத்தில் தொங்கும் சிலுவை!

நாளை என்னைப் போல்
வருவேன் என்றாயே......
விழிகள் பனித்தன
உனக்காக இதைவிட வேறு
எதுவும் செய்ய முடியவில்லையே....!

எந்த சாமியும்
எந்த நூலும்
எந்த சிலுவையும்
உன்னை காக்க வில்லை!

எனக்கென்னமோ
எந்தக் கடவுளும்
இருப்பதாய்த்தோன்றவில்லை!

Saturday, September 5, 2009

ஊனமுற்றோருக்கு


தொங்கும் கூட்டம் நடுவே
தொத்திப் பாய்ந்து
ஒற்றைக் காலில்
ஒரு கைப்பிடியில்
அலைந்து நின்றான்
மிதிவெடி மிதித்தவன்!

சட்டென திரும்பி
ஜன்னல் ஊடே
ஓடும் மரங்களை
அதிசயத்துப் பார்த்து
பாவனை செய்தேன்!

ஒரு மணிநேரம்
ஒற்றைக் காலில்
தொங்கிக் களைத்தவன்
ஏக்கமாய் முகம்பார்த்தான்!

என் இருக்கைத் தலைமேல்
அழகு வாசகமாய்
இது ஊனமுற்றோருக்கு!

Wednesday, September 2, 2009

அணுகுண்டு


அணுகுண்டை கண்டுபிடித்தது
ஐன்ஸ்ரினாம்
மடையர்கள் !

அவர்களுக்கு எங்கே
தெரியப்போகிறது !

என்னை பிடிக்கவில்லை
என்று நீ சொல்லிய
அந்த ஒருசொல்தானடி
அணுகுண்டு !

அதில்தானே
என் உடலின்
ஒருகோடி கலங்களும்
உயிரற்றுப் போனது !

Sunday, August 30, 2009

விழித்தெழு நண்பனே


வாசம் வீசும் வசந்தமே
என் பாசம் மாறா நேசவனே
வஞ்சம் இல்லா உன் நெஞ்சமீது
வஞ்சி இட்ட கோலம்
இன்னும் கோலங்களாய் !

காதல் செய்து பலகாலம் கடந்தும்
கன்னியவள் இன்னும் உன் கருவிழிகளில் !

நினைக்க வைத்தவளே நினையாத போது
நீ மட்டும் ஏன்
இன்னும் நினைவுகளோடு !

மிதக்கும் வரைதான் மேகம்
நிலத்தில் வீழ்ந்த பின் நீர்த்துளிதான் !

விடிவிற்காய் காத்திருந்து
விடியும்போது உறக்கமா?

பாதைமறைக்கும் பற்றைகளை
வெட்டியெறி

நாளையவானில் நிலவு ஒன்று
உனக்காக பௌர்ணமி ஆகும்

அதுவரை
நேற்றைய நினைவுகளை மறந்து
கானங்கள் பாடி களித்திருப்போம் !

Friday, August 28, 2009

இயங்க மறுக்கும் இதயம்


என்னவென்றும் தெரியாமல்
ஏனென்றும் புரியாமல்
ஒருதலையாய் உனைநினைத்து
இன்னும் இன்னும் உருகிட
என் இதயத்திற்கு வலிமையில்லை !


நீ தந்த நினைவுகளை
கழற்றியெறிய முடியவில்லை
தூசு போல் தட்டிவிட்டு
தூரப்போகத் தெரியவில்லை !


கயிறு கட்டப்பட்ட ஆடுபோல்
உன் நினைவுகளின் பின்னே
என் பயணம் !

உயிர்காக்க வந்தவளே
என் உயிர் போக்கி விடுவாயோ !

என் இதயத்தின் துடிப்பிற்கு
உன் இதயத்தின் சக்திகொடு.



Thursday, August 27, 2009

நண்பனே......!


தென்னைமரங்களை காணும்போதெல்லாம் கடலலையில் கால்நனைத்து
குழிநண்டு பறித்து கும்மாளமடித்து
பாட்டியின் கதைகேட்ட ஞாபகங்கள்
நேற்றுப்போல் இன்றும்
நீங்காமல் நிற்குதடா !

நீயும் நானும் ஒளிந்து விளையாடிய நாட்களில்
ரோந்துவந்த ஒருகூட்டம்
நம் பிடரி பரத்திப்போனது !

இளமையின் துடிப்பால் சென்றோமடா
பாதை ஒன்றெனத்தானே கொண்டோமடா
தலைமையின் தவறால்
பாதைகள் மாற
தனித்தனியே சென்றோமடா !

உன்னை நானும் என்னை நீயும்
குறியிடும் காலம் வருமென
கனவிலும் கண்டேனில்லையடா !

உன் மரணப்படுக்கை
என் சுட்டுவிரல் அசைவில்
துடித்துத்தான் போனேனடா !

அப்போதே நானும்
விசைதட்டி வீழ்ந்திருக்க வேண்டும்
விட்டு விட்டேன் !

இறுதியாக !
இன்னொரு பிறவியில்
என் மரணப்படுக்கை
உன் மடியில் விழவேண்டும்
என்பதை விடவேறொன்றும் வேண்டாமடா எனக்கு.

வணக்கம் நண்பர்களே


வணக்கம்



தமிழ்ப் பதிவுலகுடனான எனது சங்கமிப்பிது. இந்த வலைப்பூ ஊடாக எனது எண்ணங்களை உங்களுடன் பகிர முயல்கிறேன்.

நட்புடன்,
மதன்



ஏக்கம்



வண்ண வண்ண முகம் காட்டி
வைகறையில் எனை வாட்டி
நித்தம் நித்தம் உனை நினைத்து
பித்தம் கொண்டு நானிருக்க
சத்தம் ஏதும் இல்லாமல்
சத்தியத்தை நீ மறந்து
உறவோடு சென்றுவிட்டாய்
உறவின்றி வாடுகிறேன்