
அது நத்தாருக்கு முதல் நாள்
கல்லடி கரையில்
நண்பனோடு காற்றுவாங்கிய மாலை!
கடலை அண்ணா கடலை...
அருகில் நின்றான்
அரைகாற்சட்டை
பாதி பெனியன்
கையில் சிகப்பு நூல்
கழுத்தில் தொங்கும் சிலுவை!
மெல்லக் கதை கொடுத்தேன்
அண்ணா நான் ஆறாவது படிக்கிறேன்
அப்பா ஆத்துக்கு மீன்பிடிக்க போறார்
அம்மா வீட்டிலதான்
அக்கா சடங்காயிற்று
தம்பி மூனாவது என்றான்!
அவனுக்காக கடலை வாங்கி
நல்லா படி என்றேன்!
கட்டாயம் நான் படிச்சு
நாளை உங்களைப் போல்
ஆவேன் என்றான்!
விடிந்த பொழுதுகளில்
ஊரெங்கும் பரபரப்பு
ஊருக்குள் கடல் வருகுதாம்!
வைத்தியசாலை நிறைந்த்து
நடைபாதை எங்கும்
உயிரற்ற உடலங்கள்
நிர்வாணமாய்!
சட்டென தலை சுற்றியது
இது எங்கேயோ
பார்த்த முகம்
ஆம்...... நேற்றுப்பார்த்த
அதே முகம்
கையில் நூல்
கழுத்தில் தொங்கும் சிலுவை!
நாளை என்னைப் போல்
வருவேன் என்றாயே......
விழிகள் பனித்தன
உனக்காக இதைவிட வேறு
எதுவும் செய்ய முடியவில்லையே....!
எந்த சாமியும்
எந்த நூலும்
எந்த சிலுவையும்
உன்னை காக்க வில்லை!
எனக்கென்னமோ
எந்தக் கடவுளும்
இருப்பதாய்த்தோன்றவில்லை!